தர்மபுரி
கனமழையால் மண்சரிவு காரணமாகத் தர்மபுரி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிகக் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இருப்பினும் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாகத் தர்மபுரி அருகே உள்ள முத்தம் பட்டி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.
அந்த மார்க்கமாக வந்த கன்னூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தினால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. இந்த ரயிலில் வந்த 1850 பயணிகளும் பேருந்து மூலம் தர்மபுரி ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.