செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரியான ஏரியான மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளவு 23.30 அடி. தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. விநாடிக்கு 1,000 கனஅடி நீர் ஏரிக்கு வந்துகொண் டிருக்கிறது. இதனால், உபரிநீர் அணையில் இருந்து வழிந்தோடி, கிளியாற்றின் வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது. இதனால், கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்ட அறிவிப்பில், “மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதால் கிளியாற்றை ஒட்டியுள்ள கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், முருகஞ்சேரி, குன்னத்தூர் மற்றும் நீலமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் செல்லக் கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் வெள்ளநீர் செல்லும் கிளியாற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். கால்நடைகளை ஆற்றில் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள சிறுவர்கள் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.