சென்னை: மழை வெள்ளம் காரணமாக சென்னையில் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலும், தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக , சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளங்கள் நிரம்பி, உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோறும் நிலையில், பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, வேறு இடங்களிலும் முகாம்களிலும் தங்கி வருகின்றனர். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டு உள்ளதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி யளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது. பல பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் மொத்தமுள்ள 44 லட்சம் மின் இணைப்புகளில் கனமழையால் சுமார் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், மழைய குறைந்ததும், மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளதுடன், மருத்துவமனைகளில் எந்த தடையுமின்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.