திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக  வரும் 15-ந்தேதி சபரிமலை நடைதிறக்கப்பட உள்ள நிலையில்,  சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் கேரள மாநில அரசு அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி வரும் 15-ந்தேதி மாலை  கோவில் நடை திறக்கப்படுகிறது. 16-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு வர பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதாலும், தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாலும் அதிக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.  தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக பக்தர்கள்  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு அறிவித்து இருந்தது. இப்போது வரை கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள், பயணிக்கும் சாலை, அதற்கான வாகன வசதி பற்றிய தகவல்களையும் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

அதன்படி சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.  இதில் குளிர்சாதன வசதி கொண்ட 100 பஸ்களும், குளிர்சாதனவசதி இல்லாத 80 பஸ்களும் அடங்கும். இந்த சிறப்பு பஸ் போக்குவரத்து பம்பையில் இருந்து நாளை (12-ந்தேதி) முதல் இயக்கப்பட உள்ளது.  மேலும் கோவிலுக்கு குழுக்களாக வரும் பக்தர்கள் 40 பேர் வரை ஒன்றாக முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தேவசம் போட்டு அறிவித்து உள்ளது.