சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி,   திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணிவரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டல மாக வலுப்பெற்று நாளை மாலை காரைக்கால் ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்குவங்க கடலின் மத்தியப்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும். அதனைத் தொடர்ந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா,வடதமிழகம், புதுச்சேரி கடற்கரையை, காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கரையை கடக்ககூடும்.

இதன் காரணமாக, வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலல் 11ந்தேதி காலை முதல் மணிக்கு 30 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என தெரிவித்து உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.