பர்மிங்ஹாம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தாம் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தாலிபான் பயங்கரவாதிகள் மலாலா மீது தாக்குதல் நடத்தினர். அவர் பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக இந்த தாக்குதல் நடந்து அவர் தலையில் குண்டு பாய்ந்தும் உயர் தப்பினார். உலக அளவில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று தற்போது இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வசித்து வருகிறார்.
மலாலா தனது 16 ஆம் வயதில் கல்வியில் பாலியல் சமத்துவ அவசியம் குறித்து உரையாற்றி உள்ளார். இவர் தொடர்ந்து பெண் குழந்தைகளில் கல்விக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் திருமணத்துக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
மலாலா ஒரு இங்கிலாந்து பத்திரிகை பேட்டியில், “ மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் வாழ்க்கைக்கு ஒரு துணைவர் வேண்டுமென்றால், பிறகு ஏன் திருமண பத்திரங்களில் கையெழுத்து இடுகிறீர்கள். அது வெறும் பாட்னர்ஷிப்பாக மட்டும் ஏன் இருக்கக் கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
நேற்று மலாலா தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தமக்கும் அசார் என்பவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகப் புகைப்படங்களுடன் பதிவு இட்டுள்ளார். திருணத்தை எதிர்க்கும் மலாலா திடீர் திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலாலா தனது டிவிட்டர் பக்கத்தில் “என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள், அசரும் நானும் வாழ்க்கைக்குத் துணையாக இருக்க முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள்”. எனப் பதிவிட்டதையொட்டி அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.