சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு உடனே நிவாரண நிதியை வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளங்கள் நிரம்பி, உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தொடர் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோறும் நிலையில், பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, வேறு இடங்களிலும் முகாம்களிலும் தங்கி வருகின்றனர்.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டு உள்ளதால், 2 நாட்கள் கல்வி நிலையங்களுக்கு  விடுமுறை விடப்பட்டு உள்ளதுடன், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் எங்கு பார்த்தாலும்  வெள்ளக்காடாக காட்சி யளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது. பல பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், முன்னாள் துணைமுதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஓபிஎஸ், பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில், தொடர் மழையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழகத்துக்கு உடனே நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓபிஎஸ்-ன் இந்த கடிதம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல மாநில பாஜக மற்றும் கட்சியினரும் பிரதமரை தமிழ்நாட்டுக்கு உடனே நிவாரண உதவி வழங்கிட வலியுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக கடந்த 8ந்தேதி மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டில்,  ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசினேன். மழை பாதிப்பு நிலைமை குறித்து ஆலோசித்தேன்.மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மத்திய அரசால் முடிந்தஅனைத்து உதவிகளையும் அளிக்க உறுதி அளித்தேன். அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையின்போது  மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ், தமிழ்நாட்டுக்கு உடனே நிவாரண உதவி வழங்க வேண்டும் பிரதமருக்கு எழுதி உள்ளார். அவரது கடிதத்தில், சென்னை, மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சென்னையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் இடுப்பு அளவு தண்ணீர் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு, அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால்,  மழை வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று தாங்கள் அளித்துள்ள வாகுறுதிக்கு தமிழக மக்கள் நன்றியை உரித்தாக்குவார்கள். ஆனால், அதையும் தாண்டி, குடிசைகள், வசிப்பிடங்கள் சேதங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். அதனால், நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட்டு தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

[youtube-feed feed=1]