சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதைத் தொடர்ந்து சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளையும் (10ந்தேதி), நாளை மறுதினமும் (11ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 11-ம் தேதி அதிகாலை வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் (10, 11-ம் தேதிகளில்) கடலோர மாவட்டங் களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, மதுரை, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் 10, 11-ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
வங்க கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 11ம் தேதி வட தமிழக கரையை நெருங்கும் எனவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக புதுச்சேரி – கடலூர் இடையே கேரளா செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, வரும் 11-ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.