டில்லி

வம்பர் 29 முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொரொனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்றம் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது.  நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு குறித்த விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்தன.   அதை மத்திய பாஜக அரசு ஏற்காததால் அந்த தொடர் முழுவதுமாக முடங்கியது.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை வரும் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடத்த நாடாளுமன்ற விவகார அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.  இந்த கூட்டத்தொடரைக் காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையிலும் இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்படவும் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த வருடக் கூட்டத்தொடரில் 20 அமர்வுகள் இடம் பெற உள்ளதாக தெரிய வந்துள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் இந்த தொடர் நடைபெறாத நிலையில் தற்போது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  இந்த தொடரில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல், பெட்ரோல் டிசல் விலை உயர்வு உள்ளிட்ட பல விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.