விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழகில், புகார் கொடுத்த பெண் எஸ்.பி, அவரது கணவர் ஆகிய இருவரும் வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றி வந்த ராஜேஸ்தாஸ் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் விழுப்புரம் நீதிமன்றத்தில் செய்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் இருவரிடமும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது பெண் எஸ்.பி. கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இருவரிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்கள் அளித்த பதில்களை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் கோபிநாதன் பதிவு செய்தார்.
இதனையடுத்து தன்னைப் பணியிடை நீக்கம் செய்து வழக்கிற்கு மூலகாரணமாக இருந்த அப்போதைய மாநில உள்துறைச் செயலாளரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. தரப்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். முதலில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட புகார் கூறிய பெண் எஸ்.பி.யிடம் விசாரணை நடத்த வேண்டும் என வாதம் செய்தது.
இதனையடுத்து, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் கூறிய பெண் எஸ்.பி. மற்றும் அவரது கணவரிடம் முதலில் விசாரணை நடத்த அனுமதி அளித்தார். அவர்கள் இருவரும் 11-ம் தேதியன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.