சென்னை
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 272 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி உள்ளன.
தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து பாதுகாப்புக்காக உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னையில் பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி உள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 138 ஏரிகள் 100 சதவிகிதமும், 88 ஏரிகள் 75 சதவிகிதமும், 48 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. தவிரச் செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ஏரிகள் 100 சதவிகிதமும், 99 ஏரிகள் 75 சதவிகிதமும்,140 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. இதைப் போல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும், 34 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.
மொத்தத்தில் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 272 ஏரிகள் 100 சதவிகிதமும், 205 ஏரிகள் 75 சதவிகிதமும், 234 ஏரிகள் 50 சதவிகிதமும் மீதமுள்ள 188 ஏரிகள் 25 சதவிகிதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.