சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இதனால், பல இடங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தென்மாவட்ட விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை வரும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.  நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்தது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளக்காடானது.  சென்னை எழும்பூர், பூங்கா ரயில் நிலையம் உட்படபல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சிக்னலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

சென்னை எழும்பூர், பூங்கா, கோடம்பாக்கம் உட்பட பல்வேறு இடங்களில் மின்சாரரயில் செல்லும் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியதால், மின்சார ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.  தண்டவாளத்தில் நீர் அகற்றிய பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதேபோல, செங்கல்பட்டு, தாம்பரம் மின்சார ரயில்கள் மதியம் 12 மணி வரையிலும், சென்னை எழும்பூர் வரைமட்டுமே இயக்கப்பட்டன. அதன்பிறகு சென்னை கடற்கரைக்கு மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில்,  தென்மாவட்டங்களில் இருந்து அதிகாலையில் சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய விரைவு ரயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், ரயில் பணிகள் தங்களது சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாமல்  அவதிக்குள்ளாகினர்.