ஸ்ரீவில்லிப்புத்தூர்
தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்திலும் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டன்ர்.
விழா முடிவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம், “சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து அரசு பேருந்துகள் மக்களைப் பத்திரமாகச் சொந்த ஊர்களுக்கு தீபாவளிக்காக அழைத்துச் சென்றது. அதைப் போல் விடுமுறை முடிந்த பிறகு மீண்டும் அவர்களை அதே இடத்துக்குப் பத்திரமாக கொண்டு போய் சேர்க்கப் போக்குவரத்துத் துறை தயாராக உள்ளது.
தமிழகத்தில் தற்போது மழை மற்றும் வெள்ளம் உள்ள நிலையிலும் சிறப்புப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட உள்ளன. இதற்காக சுமார் 17000 சிறப்புப் பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சென்ற வருடம் தீபாவளியை இவ்ட இந்த வருடம் போக்குவரத்து துறை அதிக லாபம் ஈட்டி உள்ளது. மாநிலத்தில் பெண்கள் இலவச பயணம் செய்த போதிலும் போக்குவரத்துத் துறை லாபம் ஈட்டி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.