பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது கோலிவுட், டோலிவுட், தாண்டி பாலிவுட்டிலும் பிஸியாக நடிக்க துவங்கியுள்ள விஜய் சேதுபதி, பாலிவுட் வெப்சீரிஸ் ஒன்றில் வில்லனாக நடிக்க ஹீரோவை விட அதிகமாக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது.

இவர் படப்பிடிப்பிற்காக பெங்களூர் சென்ற போது ஏர்போர்ட்டில் இவரை ஒருவர் எட்டி உதைத்து தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில வினாடிகள் மட்டுமே ரெகார்ட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், விஜய் சேதுபதி தன்னுடைய பாதுகாவலர்களுடன் சென்றுகொண்டிருக்கும் போது, திடீர் என பின்னால் வரும் நபர் அவரை எட்டி உதைத்து தாக்குகிறார். பின்னர் விஜய் சேதுபதியுடன் வந்தவர்கள் மற்றும் சி.எஸ்.எஸ்.எப் அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்துவது போல் உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது, “இது தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை” என்று கூறினார்கள்.

அதன் பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

அவர் போலீசாரிடம் கூறும்போது, விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார். மேலும் அந்த வாலிபர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரை கண்டுபிடித்தனர். அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.