டெல்லி: சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம் செய்யப்படுவதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.அதன்படி இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக சந்தை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் பொருட்களின் விலைகளும் வரலாறு காரணாத அதிகரித்து வருவது பொதுமக்களிடையே, குறிப்பாக இல்லத்தரசிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டருக்கு ரூ. 130 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளதுஇந்த விலைவாசி உயர்வு பொதுமக்களிடையே ஆட்சியாளர்கள் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சமீபத்தில் நடைபெற்று முடிந்த பல மாநில இடைத்தேர்தல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு கடுமையான நெருக்கடியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, தீபாவளி பரிசாக, பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை சற்று குறைத்த மத்தியஅரசு, இன்று இறக்குமதி செய்யப்பட்டும் சமையல் எண்ணைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 2.5 சதவிகித செஸ் வரியை நீக்கி அறிவித்து உள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறி உள்ளது.
2022ம் ஆண்டு உ.பி., பஞ்சாப், ஹிமாச்சல், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் வர உள்ளதால், எண்ணை பொருட்களின் விலை உயர்வு தேர்தலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணிய மத்தியஅரசு, தற்போது எண்ணை பொருட்களின் விலைகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே இறக்குமதிக்கான சுங்கவரியை படிப்படியாக குறைத்து வந்தது மட்டுமின்றி 2022ம் ஆண்டு மார்ச்மாதம் 31ம்தேதி வரை அக்ரி செஸ் வரியையும் குறைத்துள்ளது. மேலும் எண்ணெய்ப் பொருட்களின் விலையை குறைக்க எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பொருட்களின் சேமிப்பு வரம்பை மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.