சென்னை: திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர உரிமையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது.
இன்றைய நவீன யுகத்தில், ஆண் பெண் திருமணம் செய்துகொள்ளாமலேயே இணைந்து வாழ்ந்து வருகின்றனர். முன்னதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதி மன்றம் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், “சமுதாயத்தின் மரபு சார்ந்த பிரிவினருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், எல்லையை கொண்ட அரசியலமைப்பு நீதிமன்றம் வயது வந்த ஆணும், பெண்ணுக்குமான தடையற்ற உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது. வாலிபருடன் இணைந்து வாழ இளம்பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ளது, வாலிபர் திருமண வயதை அடைந்த பின்னர் அவரை திருமணம் செய்துக்கொள்ளவும் செய்யலாம் என கூறியது. இதனால், இந்த முறையிலான வாழ்க்கை முறைக்கு சட்ட ரீதியிலான அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இதையடுத்து, லிவிங் டூ கெதர் எனப்படும் திருமணம் செய்யாமலேயே ஆண் பெண் இணைந்து வாழும் மேலை நாட்டு கலாச்சாரம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதுபோல சென்னையில் லிவிங் டு கெதரில் இணைந்து வாழ்ந்து வந்த ஜோசப், கலைச்செல்வி தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை தொடுத்த கலைச்செல்வி என்பவர், தனது மனுவில், தன்னுடன் லிவிங் டு கெதர் மூலம் வாழ்ந்து வந்த ஜோசப் பேபி என்பவருடன் முண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்றும், எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வைத்திய நாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர சட்டரீதியாக உரிமை இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.