சென்னை
தமிழக முதல்வர் வீட்டுக்குக் குடி போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார். இதனால் பரபரப்பு அடைந்த காவல்துறையினர் முதல்வர் இல்லம் மற்றும் சுற்றுப்புறங்களில் மோப்பநாய்களுடன் சோதனை நடத்தி உள்ளனர்.
இந்த சோதனையில் இது புரளி எனக் கண்டறியப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மிரட்டியவரின் அலைப்பேசி எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
கைதான பழனிவேல் என்பவர் கடலூரைச் சேர்ந்த 40 வயது நபர் ஆவார். இவர் குடிபோதையில் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியது தெரிய வந்துள்ளது. சென்னை மாம்பாக்கத்தில் ஓட்டலில் பணி புரியும் அவர் உதயநிதி ஸ்டாலின் படத்தில் பாட்டுப்பாட ஆசைப் பட்டதால் அவர் கவனத்தைக் கவர இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.