மாமல்லபுரம்
நரிக்குறவர் என்பதற்காகக் கோவிலில் அன்னதானம் மறுக்கப்பட்ட நரிக்குறவர் பெண்ணுடன் அமைச்சர் சேகர்பாபு அதே கோவிலில் உணவருந்தி உள்ளார்.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசு அன்னதான திட்டப்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்குச் சென்று உணவருந்த ஒரு நரிக்குறவர் பெண் வந்துள்ளார். அவரை முதல் பந்தியில் அமர அனுமதிக்கவில்லை என்பதால் காத்திருந்து இரண்டாம் பந்தியில் உணவருந்த அமர்ந்துள்ளார்.
ஆனால் அப்போதும் அவரை எழுப்பி அனுப்பிய சிலர் உணவு மீதம் இருந்தால் அளிப்பதாக கூறி உள்ளனர். அந்த பெண் இது குறித்து குற்றச்சாட்டு தெரிவிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை முகநூலில் கண்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதே கோவிலில் அந்த பெண்ணுடன் உணவருந்தி உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “முன்பு நரிக்குறவர் என்பதால் கோவிலில் அன்னதானம் அளிக்க மறுத்த அதே பெண்ணுடன் இன்று நான் உணவருந்தி உள்ளேன். இந்த ஸ்தலசயன பெருமாள் கோவில் குடமுழுக்கு திருப்பணிகளுக்கு ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜைகள் வரும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி தொடங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபுவின் இந்த செயலுக்கு டிவிட்டரில் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாராட்டுகள் சார் @PKSekarbabu pic.twitter.com/8AksCjALxA
— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) October 29, 2021