சென்னை: கொரோனா 3வது அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல நாடுகள் மட்டுமின்றி கர்நாடகா உள்பட சில மாநிலங்களிலும் ஏ.ஒய். 4.2 என்ற வகையான கொரோனா பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொரோனா தாக்கம் தமிழகத்தில் இதுவரை பரவவில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பு என்று கூறப்படும் நிலையில், அதையும் மீறி பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் அதிகரித்தே வருகிறது.
இந்த நிலையில் டெல்டா கொரோனாவின் புதிய திரிபான ஏ.ஒய் 4.2 வைரஸ்தான் பாதிப்பு பரவி வருவதாக உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. தற்போது சீனாவில் இந்த வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாகவும், மேலும் சில நாடுகளில் பரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடாக மாநிலத்தில், 7 பேருக்கு ஏ.ஒய். 4.2 கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் ஏ.ஒய் 4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏ.ஒய். 4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு சதவீதம் அளவுக்கு இருக்கிறது. எனினும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
தமிழகத்தில் 7ஆம் கட்ட தடுப்பூசி முகாம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி சனிக்கிழமையன்று நடத்தப்படும். மேலும், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள் தான் இரண்டாம் கட்ட கோவேக்ஸின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்று கூறினார்.