மும்பை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

சொகுசு கப்பலில் நடைபெற்ற போதையுடன் கூடிய கேளிக்கை விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான்,  போதை தடுப்பு பிரிவு சோதனையின்போது, அக்டோபர் 8ஆம் தேதி கைது  செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து வந்தது. இதனால் சுமார் 3 வார காலம் அவர் சிறையில் வாடினார்.

இநத் நிலையில், ஆர்யன்கான் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற விசாரணையின்போது, கப்பலில் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டபோது,  அவர் போதை பொருளை பயன்படுத்தவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த போதை பொருள் தடுப்புதுறை, அவர் தனது காலணிகளில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறியது. மேலும்,.ஆர்யன் கானின் வாட்ஸ்அப் உரையாடல் அவர் சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பதை எடுத்துரைக்கிறது  அதனால், ஆர்யன்கானுக்கு பின்னணியில் சர்வதேச போதை பொருள் கும்பல் இருப்பதாகவும் இது ஒரு சதிச் செயல் என்றும் போதை தடுப்பு பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஆர்யன்கானிடம்  போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டதுடன் அவருக்கு  ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் அவருடன்  கைது செய்யப்பட்ட அவரது நண்பர்களான அர்பாஸ் மேர்சன்ட், முன்மும் தமேச்சா ஆகியோருக்கும் ஜாமின் வாங்கப்பட்டுள்ளது.