நெட்டிசன்
எழுத்தாளர், மனித உரிமை வழக்கறிஞர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் முகநூல் பதிவு..
‘பெகசஸ்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்திருக்கிறது. அரசு வாங்கிய மொபைல் செயலி தனி மனிதர்களை வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய தானே ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. இந்தக் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் செயல்படும். இந்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களையும் தானே தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள், தொழில் நுட்ப நிபுணர்கள், சைபர் க்ரைம் நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு உடனடியாக தங்கள் பணியைத் துவக்க வேண்டும். அவர்களுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படித்தான் செய்வார்கள் என்று எதிர்பார்த்ததால் இதில் பெரிய ஆச்சரியமில்லை. தீர்ப்பில் நீதிமன்றம் பயன்படுத்தி இருக்கும் மொழிதான் ஆச்சரியமானது. தீர்ப்பு மத்திய அரசைக் கடுமையாக சாடி இருக்கிறது. ‘தேசப் பாதுகாப்பு என்ற பூச்சாண்டி காட்டி நீதிமன்றத்தின் வாயை மூடி விட முடியாது,’ என்று சொல்லி இருக்கிறது. ‘கேட்ட கேள்விகள் எதற்கும் அரசிடம் இருந்து நேரடி பதில்கள் வரவே இல்லை. பூசி மெழுகிய விளக்கங்களே கிடைத்துக் கொண்டிருந்தன,’ என்றிருக்கிறது.
அதை விட முக்கியமாக, ‘தனி மனித அந்தரங்கம் என்பது அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு மட்டும் உரித்தானதல்ல. இது அனைத்துக் குடிமக்களுக்கும் இருக்கும் அடிப்படை உரிமை. அது ஒரு “புனிதமான இடம்” – அதற்குள் அலட்சியமாகப் புக முடியாது,’ என்று சொல்லி இருக்கிறது. (Individul privacy is a sacred space.) புனிதம் என்ற வார்த்தையை சொன்னாலே பசுமாடும், கர்ப்பக்கிரகமும் மட்டுமே நினைவுக்கு வரும் இந்துத்துவ நண்பர்களுக்கு தனி மனித அந்தரங்கம் கூடப் புனிதமான இடம்தான் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். புரிந்து கொள்ள கொஞ்சம் முயற்சி செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
என்னைப் பொருத்தவரை, நிபுணர் குழுவை விட இந்த வரிகள்தான் அதி முக்கியமானவை என்று கருதுகிறேன். வருங்காலத்தில் வெவ்வேறு வழக்குகளில் வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் இந்த வரிகளை மேற்கோள் காட்டப் போகிறார்கள். அந்த அளவுக்கு தனி மனித அந்தரங்கத்தை பாதுகாப்பதில் இது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கப் போகிறது.
தனி மனிதர்களை அரசியல் லாபத்துக்காக வேவு பார்க்க, அரசின் செலவில் வாங்கிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியது குற்றம் மட்டுமல்ல. அது அவலமான ஒரு அணுகுமுறை. ‘தேச பக்திக்கே’ நேர்ந்து விட்டதாக சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி இதை செய்திருக்கிறது என்பது பற்றி நியாயமாகப் பார்த்தால் தேசபக்தி பற்றி நீட்டி முழக்கி கிளாஸ் எடுக்கும் பாஜக அபிமானிகளுக்குத்தான் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் பிரதமர் போலவே இந்த விஷயத்தில் வாயில் கொழுக்கட்டையை அடைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
இந்தத் தீர்ப்பின் மூலம் ‘பெகசஸ்’ குறித்த உண்மைகள் வெளிவருமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு திறமையாக வடிவமைக்கப்பட்ட செயலியில் தனது தடயங்களை முழுவதுமாக அழித்துக் கொள்வதற்கும் கண்டிப்பாக வழிமுறைகள் வைத்திருப்பார்கள்தானே. ஏதாவது வெளிவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதைக்கு இந்தத் தீர்ப்பில் கிடைத்த பலன், பாஜகவின் ‘தேசபக்தி’ கோஷம் பாசாங்குத்தனமானது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்துக்கு நன்றிகள் பல.