டெல்லி: முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, பிஜி நீட் கலந்தாய்வு அக்டோபர் 24ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், 8லட்சம் ஆண்டு வருமானம் பெறும் உயர்வகுப்பினருக்கு 10% சதவிகித இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பால், அதுவரை பிஜி நீட் கலந்தாய்வை (முதுகலை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு) நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றம் முடிவு செய்த பிறகே கலந்தாய்வை நடத்தலாம் என்றும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் உயர்சாதி ஏழைகள், ஓபிசி ஒதுக்கீடு குறித்த வழக்கு முடியும் வரை கலந்தாய்வுக்கு தடை என்று தெரிவித்துள்ளது.