சென்னை: பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிவித்து உள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாள் விவேக் மரணம் அடைந்தது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அவரது மரணம் தடுப்பூசியால் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். . சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட மனிதநேயமிக்கவரான விவேக், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வு களிலும் பங்கேற்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். மரங்களை நடுவதில் ஆர்வம் கொண்டவரான இவர், ஒரு கோடி மரக்கன்றுங்களை நட்டு வந்தார். அதுபோல, விவேக் கொரோனாவுக்கு எதிரான போரிலும் பெரும் பங்காற்றினார்.
தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தபோது, மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டியபோது, இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 2021ம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார்.
நடிகர் விவேக்கின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தடுப்பூசியின் பயன்பாடு கேள்விக்குறியானது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான் அவர் இறந்துவிட்டார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தமிழ்நாடு சுகாதாரத் துறை மறுத்துவந்தது.
இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் கடந்தஆகஸ்டு மாதம் புகார் அளித்திருந்தார். புகாரில், விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தியபோது விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவரது மரணம் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை விசாரணைக்கு ஏற்ற தேசிய மனித உரிமை ஆணையம் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்தி 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டது. தற்போது விசாரணை முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்றும், விவேக்குக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளது தெரிய வந்துள்ளது என தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது.