சென்னை: நவம்பர் 1ந்தேதி முதல் மழலையர் வகுப்பு உள்பட 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், இதில் சில மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாகவும் இன்று கல்வித்துறை உள்பட உயர்அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை கிண்டியில் தேசிய வருவாய்வழி கல்வி உதவித் தொகை திட்டத் தோ்வுக்கான  (என்எம்எம்எஸ்) பயிற்சி புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  கல்வித் துறையின் ஒவ்வொரு விஷயத்திலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறாா். இந்தத் துறையில் எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அது மாணவா்களுக்கு பலன் தருமா? என்று ஆராய்ந்து முதல்வா் செயல்படுத்தி வருகிறாா் என்றார்.

நீட் தோ்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடா்ந்தாலும், தோ்வுக்கு பள்ளி மாணவா்களைத் தயாா்படுத்தும் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த முறை நீட் தோ்வுக்கான பயிற்சியை வழங்கிய இ-பாக்ஸ் நிறுவனமே இப்போதும் மாணாக்கர்களுக்கு பயிற்சியை வழங்கி வருகிறது என்று தெரிவித்தவர், நவம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறப்பதில் சில தவறான அறிவிப்புகள் வெளியாகி விட்டன. மழலையர் பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றவர், அதுதொடர்பாக, திங்கள்கிழமை முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்கள் முறையாக கல்வி கற்க முடியாத சூழலில்,  மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாகவும் இன்று ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை உயர்அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்தே, பள்ளி திறப்பு தொடர்பான அறிவிப்பில் சில மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.