டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலானது 21 ஆகஸ்ட் 2022 மற்றும் 20 செப்டம்பர் 2022 ஆகிய நாட்களில் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பணவீக்கம், விவசாயிகள் பிரச்சினை, அரசியல் நெருக்கடி தொடர்பாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றினோம் என்றும் கூறியுள்ளார்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி இன்று கூடியது. கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் முக்கிய பிரமுகர்கள்,மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாட்டின் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகள், விவசாயிகள் பிரச்சினை, எரிபொருள் விலை உயர்வு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சி தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய தலைவர் சோனியாகாந்தி, விலைவாசி உயர்வு மக்களை தாங்க முடியாத துயரத்தில் தள்ளுவதாக தெரிவித்தவர், நானே கட்சியின் முழுநேர தலைவராக செயல்பட இருப்பதாகவும் தெரிவித்ததுடன், உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 3 தீர்மானங்களை நிறைவேற்றியதாக தெரிவித்து உள்ளார்.
அதன்படி, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, பணவீக்கம் மற்றும் கடுமையான விவசாய நெருக்கடி மற்றும் விவசாயிகள் மீதான கொடூரமான தாக்குதல் குறித்த 3 தீர்மானங்களை காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, மோடி தலைமையிலான பாஜக அரசின் தோல்வி மற்றும் எதிர் பிரச்சாரம் குறித்து பயிற்சி அளிக்கும் வகையிலான திட்டத்தையும் தொடங்க உள்ளோம் என்றவர், அனைத்து நிலைகளிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு கட்சி சித்தாந்தங்கள், கொள்கைகள், ஒரு காங்கிரஸ் பணியாளரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும், AICC தலைவர் தேர்தல் 21 ஆகஸ்ட் 2022 முதல் 2022 செப்டம்பர் 2022 வரை நடைபெறும் என்றும் கூறினார்.