டெல்லி: கனமழையால் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வயநாடு எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவன் பல பகுதிகளில் விடாது மழை பொழிந்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மிதக்கின்றன. இன்று 2வதுநாளாக மழை தொடர்கிறது. தொடர் கனமழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வழிவதால், மக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கேரள மக்கள் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என்று வயநாடு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், “எனது எண்ணங்கள் கேரள மக்களிடம் உள்ளன. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் மற்றும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.