டில்லி

டந்த மே மாதம் அறிமுகமான கிளப் ஹவுஸ் செயலியில் ஆபாச உரையாடல்கள் அதிகரித்துள்ளன

பெரும்பலனோர் புகைப்படம், வீடியோக்கள், உரையாடலுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிளப் ஹவுஸ் என்னும் செயலி அறிமுகமானது. நமது கருத்துகளை நமது குரலின் மூலம் உலகிற்குத் தெரிவிக்க முடியும் என்பதால் பயனர்களிடையே இந்த செயலி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த செயலி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மார்ச் 2020ம் ஆண்டு ஆப்பிள் மொபைல்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு அங்குக் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் கடந்த மே 21ம் தேதி பீட்டா பதிப்பாக இச்செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த செயலியை லட்சக்கணக்கானோர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

தொடக்கத்தில் பல விதமான தலைப்புகளுடன் கிளப் ஹவுஸ் செயலி 24 மணி நேரமும் ஆரோக்கியமான உரையாடல்களுடன் பயனர்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாட்கள் செல்ல செல்ல இதுபோன்ற மக்களுக்குப் பயனுள்ள தகவல்கள் குறைந்து 18+ குறித்த பேச்சுகள் அதிகரித்ததால், பலரும் இந்த செயலியை உபயோகிப்பதைக் குறைத்துக்கொண்டனர்.

நல்ல எதிர்பார்ப்புடன் வந்த செயலி தற்போது வந்த இடம் தெரியாமல் சென்று கொண்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா அச்சுறுத்தலால் ஆன்லைன்  வகுப்புகள் நடைபெற்று வருவதால் சிறுவர்கள் தங்களது பொழுதுகளை மொபைல் போனிலேயே கழித்து வருகின்றனர். இந்த சமயத்தில் அதிகமாக ஆபாச அரட்டைகள்  நிகழ்ந்து வரும் இந்த செயலிக்குக் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.