இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட மோடி அரசின் பிற்போக்கான அணுகுமுறையே காரணம் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் அணில் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

அணில் ஸ்வரூப்

2016 ம் ஆண்டே மத்திய அரசை இதுகுறித்து எச்சரித்த போதும் அவர்கள் மந்தகதியில் தொலைநோக்கு பார்வை ஏதுமின்றி செயல்பட்டதே இன்றைய இந்த நிலைக்குக் காரணம் என்று ‘தி வயர்’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கோல் இந்தியா நிறுவனம் அந்த ஆண்டு அபரிமிதமான வளர்ச்சியையும் நிலக்கரி கையிருப்பையும் கொண்டிருந்தபோதும் அதனை மேலும் ஊக்கப்படுத்தாமல், அதன் நிதியை வேறு சில திட்டங்களுக்காக மத்திய அரசு எடுத்துக்கொண்டது.

இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் சுரங்கப் பணிகள் முடக்கியதால் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்கு மத்திய அரசின் கொள்கையே காரணம் என்று சாடினார்.

மேலும், 2017 ம் ஆண்டு இந்நிறுவனத்தின் தலைவர் சுதிர்த்த பட்டாச்சார்யா-வின் பதவிக்காலம் முடிந்ததும் அவருக்கு பதவி நீடுப்பு கொடுக்காமல், ஓராண்டுக்கும் மேலாக அந்த பதவி காலியாகவே வைக்கப்பட்டதால், அதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்த கோல் இந்தியா நிறுவனம் சுணக்கமடைந்தது.

இதைவிட அபத்தமாக, இதில் பணிபுரிந்த சுரங்க மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை ‘ஸ்வச் பாரத்’ திட்ட கழிவறைகளுக்கு சாக்கடை தோண்டும் பணிகளை மேற்பார்வையிட அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த துறைக்கான நிதியை வேறு திட்டங்களுக்கு மடைமாற்றியது மட்டுமல்லாமல், கோல் இந்தியா நிறுவன வருமானத்தை உரத்தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.

தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க உடனடியாக ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிலக்கரியை மத்திய அரசு என்னை விலை கொடுத்தேனும் கொள்முதல் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதம் கோல் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த 20 சதவீத தனியார் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து தேவையான அளவு நிலக்கரி கிடைக்குமா என்பது சந்தேகமே என்று கூறிய அணில் ஸ்வரூப்.

மாநில அரசுகளுடன் இணக்கமான சூழலை உருவாக்கி கோல் இந்தியா நிறுவனத்தின் 10,000 கோடி ரூபாயை மீண்டும் அதில் முதலீடு செய்வதன் மூலமே புதிய சுரங்கங்களை தோண்டவும், பழைய சுரங்கங்களை விரிவாக்கம் செய்யவும் முடியும் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.