வாஷிங்டன்

நாடெங்கும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாகச் சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறி வருகையில் அது ஆதாரமற்ற செய்தி என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

தற்போது நாடெங்கும் நிலக்கரி பற்றாக்குறை கடுமையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதையொட்டி பல மாநில அரசுகள் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ளன.   இதனால் நிலக்கரி பங்கீட்டை அதிகரிக்கப்  பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஒரு சில  மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படலாம் என அரசு அறிவித்துள்ளது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சார அமைச்சர் ஆர் கே சிங் நாட்டில் நிலக்கரி  பற்றாக்குறை உள்ளதை ஒப்புக் கொண்டு விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்கப் பயணத்தில் உள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நமது இந்தியா ஒரு மின் உபரி நாடு இரண்டு நாட்களுக்கு முன்பு மின் துறை அமைச்சர் ஆர் கே சிங் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாகத் தெரிவித்துள்ளதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை

உண்மையில் அமைச்சரின் அறிவிப்பின்படி  ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் மின்சார தயாரிப்பு தேவைக்கான நிலக்கரி கையிருப்பு அந்தந்த மின் உற்பத்தி ஆலைகளில் உள்ளது.  எனவே நாட்டில் நிலக்கரி விநியோக சங்கிலியில் எவ்வித பாதிப்பும் இல்லை” என அதிரடியாகக் கூறி உள்ளார்.