சென்னை: தமிழகஅரசு தொடங்கியுள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 20.28 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, மருத்துவர்கள், செவிலியர்கள், தேவையான மருந்துகளுடன் பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று சேவைகள் செய்து வருகின்றனர். 45 வயதுக்கு மேற்பட்ட பிரஷர் மற்றும் சுகர் நோயாளிகளுக்கான தேவையான மருந்துகளை வழங்கி வருகின்றனர். மேலும், டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டம் முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
இநத நிலையில், இந்த திட்டத்தின்படி, இதுவரை பயன்பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று வரை உயர் ரத்த அழுத்த நோய் உள்ள 8,48,568 பேர், நீரிழிவு நோய் உள்ள 5,85,002 பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ள 4,17,745 பேருக்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 65,536 பேருக்கு நோய் ஆதரவு சிகிச்சையும் 1,11,281 பேருக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டதாகவும், 420 சிறுநீரக நோயாளி களுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தினால் நேற்று வரை மொத்தம் 20,28,605 பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.