சென்னை: மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
பத்திரிகையாளர் அன்பு என்ற வி. அன்பழகன் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இதழியல் உலகில் சுழன்று வந்தவர். நக்கீரன் , தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய வி.அன்பழகன் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் செய்தி மையம் என்ற ஊடக நிறுவனத்தின் மூலம் கடந்த ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பல முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தார்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தலைவராகவும் இருந்து வருகிறார். மக்கள் செய்தி மையம், உள்ளாட்சி அலசல் என்ற பெயரில் பத்திரிகையை நடத்தி வருகிறார். சென்னை பூந்தமல்லி மல்லியம் நரசிம்ம நகரில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த ஆட்சியில் நடைபெறும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியதால், காவல்துறையினரால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக பத்திரிகையாளர்கள் போராட்டமும் நடத்தினர். அன்பு மீது 23 பொய்வழக்குகள் போடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டநிலையில் அவர்மீதான குண்டர்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 05-07-2021 அன்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
பத்திரிகையாளர் அன்பு மறைவுக்கு, பத்திரிகை டாட் காம் இணையதளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.