சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை ஆகியவற்றில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து மொத்தமாக 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. ஆனால் 56 நீதிபதிகளே பதவி வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சுப்பையா சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கொல்கத்தா சென்றதும், மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 55ஆக இருக்கும். 20 இடங்கள் காலியாகவே உள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைப்படி 4 வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி மூத்த வழக்கறிஞர்கள் மதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபி ஆகிய 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரையை ஏற்று சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஸ்ரீமதி சுந்தரம் நீதிபதியாக நியமிக் கப்பட்டுள்ளதால், உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் விரைவில் நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.,