மும்பை

பிரதமரின் புகைப்படம் மற்றும் தேசியக் கொடியை பி எம் கேர்ஸ் நிறுவன தளத்தில் இருந்து நீக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பி எம் கேர்ஸ் என்னும் அறக்கட்டளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு முன்வருபவர்கள் நிதி உதவி அளிப்பதற்காகத் தொடங்கப்பட்டது.  இதற்கு நன்கொடை அளிக்கப்படும் தொகைக்கு, 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. சமீபத்தில் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விக்ரந்த் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில்  ’கொரோனா தொற்று காலத்தில் சுகாதார அவசர தேவைகளுக்காகவும், மருத்துவ நல திட்டங்களுக்காகவும் ‘பி.எம்.,கேர்ஸ்’  (PM Cares )நிதி என்ற அறக்கட்டளையைப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார்.

இந்த பி எம் கேர்ஸ் என்பது ஒரு பொது தொண்டு அறக்கட்டளை மற்றும் அரசு சாரா நிறுவனம் ஆகும், இந்த நிதி தனிப்பட்ட முறையில் செயல்படுகிறது மற்றும் அது சேகரிக்கப்பட்ட தொகை இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லாது.  ஆகவே, பிரதமரின் பெயர் மற்றும் படம், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது சட்டங்கள் மற்றும் விதிகளை மீறுவதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் ஏ.ஏ. சயீத், எஸ்.ஜி.திகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.