சென்னை: உளுந்து, பச்சைப்பயிறை போன்றவற்றை தமிழகஅரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசிப்பயிறை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்தவற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2021-22ம் ஆண்டு பருவத்தில் 4 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தும், 3 ஆயிரத்து 367 மெட்ரிக் டன் பச்சைப்பயிறும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும்.,
உளுந்துக்கு கிலோ ஒன்றுக்கு 63 ரூபாயும், பச்சைப்பயறுக்கு 72 ரூபாய் 75 பைசாவிற்கும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துவரையை பொறுத்தவரை தற்போது வளர்ச்சிப் பருவத்தில் உள்ளதால் அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்.,
கொள்முதலுக்காக கொண்டுவரப்படும் உளுந்து, பச்சைப்பயிரின் ஈரப்பதம் 12 சதவீதத்தில் இருக்குமாறு நன்கு உலர வைத்து, சுத்தம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.உளுந்து கொள்முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை. ,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 31 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும்.,
பாசிப்பயறு கொள்முதல் சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொள்முதல் அக்டோபர் 1 முதல் 90 நாட்கள் நடைபெறும் என்றும், திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள்து நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களுடன் சம்பந்தபட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறுக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.