மதுரை: ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை உயிரிழந்துள்ளது. இது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஜல்லிகட்டு மாடுபிடி வீரர்களிடையே யும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர், தனது சொந்த ஊரில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் என்ற பெயரில் 3 காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறக்கி விட்டு வருகிறார். நடப்பாண்டு பொங்கலின்போது நடைபெற்ற ஜகல்லிக்கட்டு போட்டியிலும் இந்த காளைகள் விளையாடி, கெத்து காட்டின.
அலங்காநல்லூலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகளை யாராலும் அடக்க முடியவில்லை. சீறிப் பாய்ந்து வீரர்களுக்கு போக்கு காட்டிச்சென்றது.
இந்த நிலையில் வெள்ளைக்கொம்பன் காளை கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கள்கிழமை (11.10.2021) பரிதாபமாக உயிரிழந்தது. வெள்ளைக் கொம்பனும் உயிரிழந்ததால் மாஜி அமைச்சரின் குடும்பமே சோகத்தில் உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்கள், நேரில் வந்து வெள்ளைக் கொம்பன் காளைக்கு அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.