சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் எட்டு மாவடங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது.  மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மழை மற்றும் கனமழை எய்து வருகிறது.    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா. புவியரசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்,  நீடிக்கிறது. மேலும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது.

இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன், இன்று கன மழை பெய்யலாம்.

இத்துடன் டெல்டா மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

மற்ற மாவட்டங்களில், இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  மேலும் சில நாட்களுக்கு இதே நிலை நீட்டிக்கலாம்.

தலைநகர் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.   நாளை மறுநாள் ஆந்திரா – ஒடிசா கரையை நோக்கி இது  நகரும்.

இன்றும் நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.