சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கலியாக உள்ள 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டுகள், 1381 ஒன்றிய வார்டுகள், 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு அக். 6, 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, இந்த மாவட்டங்களில் 37 லட்சத்து 77 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள், 835 திருநங்கைகள் என, மொத்தம் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.