திருச்சி
தமிழ்நாட்டில் மின் தடை இருக்காது எனத் தமிழக மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.
நாடெங்கும் கடும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின் தடை ஏற்படும் என அச்சம் எழுந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசு அதிக நிலக்கரியை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. இன்று திருச்சியில் தமிழக மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செந்தில் பாலாஜி, “முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் சீரான மின் விநியோகம் அளிக்க துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினசரி அனல் மின் நிலையத்துக்கு 56,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. நாளொன்றுக்கு 60,000 டன் அளவுக்கு வருகிறது.
கடந்த அட்சியில் அனல் மின் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 1,800 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது அனல் மின் நிலையங்களின் உற்பத்தி 70 விழுக்காடு உயர்ந்துள்ளது. தற்போது வரை சீரான மின் விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. நம் மாநிலத்துக்குத் தினசரி 16 ஆயிரம் மெகாவாட் வேண்டும். ஆனால் 2,500 மெகா வாட் பற்றாக்குறை உள்ளது.
பற்றாக்குறையை சரி செய்ய மாவட்டந்தோறும் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காவை அமைக்கும் திட்டத்தை முதல்வர் வழங்கியுள்ளார். முதல்வர் தமிழகத்தில் ஒரு நொடிகூட மின் வெட்டு இருக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை மின்தடை இருக்காது. மாறாகச் சீரான மின் விநியோகம் இருக்கும். ” எனத் தெரிவித்துள்ளார்.