சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, கோவில்களை திறக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கிய பண்டிகைய விஜயதசமி வெள்ளிக்கிழமை வருவதால்,அன்றைய தினம் கோவில்களை திறக்கப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா குறைந்துள்ள நிலையில், வழிபாட்டுத்தலங்களை தவிர மற்ற அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல்களின்படி 5சதவிகிதத்திற்கும் குறைவான பாதிப்பு இருந்தாலே, தளர்வுகள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 1 சதவிகிதம் அளவிலேயே கொரோனா பாதிப்பு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தெரிவித்துள்ளார்.ஆனால், கோவில்களை திறக்க மாநில அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில், விஜயதசமி நாளில் கோயில்களைத் திறக்க அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் இந்த மனவை தாக்கல் செய்துள்ளார். மனுவில், “சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தை கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் கோயிலை திறக்காமல் பிடிவாதமாக இருக்கிறது. ஆகவே நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோயில்களை திறக்க அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
பல மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தமிழக அரசு வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தரிசனம் செய்ய தடை விதித்துள்ள நிகழ்வு மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இந்துக்கள் தெய்வங்களை வழிபடுவதில் வெள்ளிக்கிழமை முக்கியமான நாள் என்பதால், அன்றைய நாளில் கோவில்களை மூடப்பட்டு இருப்பது வேதனையை தருகிறது.