ஆதிச்சநல்லூர்
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் உலகில் முதன் முதலில் 1876 ஆம் ஆண்டு அகழாய்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1903-14 ஆண்டுகளில் மீண்டும் அகழாய்வு நடந்தது. பிறகு கடந்த 2004-05 ஆம் ஆண்டு அகழாய்வு நடந்தது. இங்கு சுமார் 600 சதுர மீட்டர் அளவில் பள்ளம் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது.
இதுவரை இந்த பகுதியில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. அதைத் தவிர இந்த பகுதியில் ஏராளமான இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்தன. 2004-05 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி குழுவினர் நடத்திய ஆய்வுக்குப் பிறகு இங்கு ஆய்வு எதுவும் நடக்கவில்லை.
இன்று ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது. அகழ்வாய்வு பணிகளைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் அகழாய்வுப் பணியைத் தொடங்கி வைத்துள்ளனர்.