சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1ந்தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் கடந்த ஒன்றரை வருடமாக மூடப்பட்டு கிடக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதம் முதல் கட்டமாக உயர்நிலை, மேல்நிலைபள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து,  நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில்  அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்நது 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி வகுப்பறைகள், பள்ளி வளாகங்களை தூய்மையாக இருப்பதையும், போதிய அளவு முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் இருப்பில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கேற்றவாறு முக கவசம் இருப்பதையும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் .

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் .

மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து, வகுப்பறைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில், சுழற்சி முறையில் கற்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு, ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் முழு பொறுப்பு ஆவார்கள் .

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி, எளிதில் அணுகுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கு தன் சுத்தம் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.