சென்னை

பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனால் சிறை படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்ட பிறைசூடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.  இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். தவிர 5000க்கும் அதிகமான பக்திப் பாடல்களை எழுதி ஆன்மீக உலகிலும் புகழ் பெற்றவராக இருந்தார்.

இவர் என் ராசாவின் மனசிலே என்னும் திரைப்படத்தில் சோலைப் பசுங்கிளியே என்னும் பாடலை எழுதி தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர்  பரிசு பெற்றுள்ளார்.  இவர் இன்று மதிய உணவுக்குப் பிறகு குடும்பத்தினருடன் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்த போது திடீர் என சரிந்து விழுந்து உயிர் இழந்தார்.  அவர் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்,

“நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் – உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்  திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்”

எனத் தெரிவித்துள்ளார்.