சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், பொது மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள் அமைப்பது தொடர்பாக விரிவான விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தலைவரின் சிலையை வைக்கப்படுதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சாலைகள் மற்றும் பொது இடங்களில் தலைவர்களின் சிலை வைக்கக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது. அத்துடன், பொதுஇடங்களில் சாலைகளின் நடுவில் சிலைகளை வைக்க மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கூறியது.‘
அதுபோல, சென்னை உயர்நீதிமன்றமும், கடந்த ஏப்ரல் மாதம், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முறையாக அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் பல்வேறு தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, தமிழகம் முழுவதும் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளின் அருகே அமைக்கப்பட்டிருக்கும் ஏணிகளை அகற்றவும், அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், புதிதாக சிலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
ஆனால், உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு உள்பட எந்தவொரு மாநில மதிக்காமல், பல இடங்களில் சிலைகள் வைக்கும் பணி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அரசியல் கட்சியினரும், ஜாதிய அமைப்பினரும் தங்களுக்கு பிடித்தமானவர்களின் சிலையை வைத்துக்கொண்டேதான வருகின்றன. இதனால் பல சமயங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி வைக்கப்பட்டது. இந்த சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து, சிலையை அதே இடத்தில் நிறுவ உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த கிராமத்தை வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், அமபேத்கர் சிலையை அரசு அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை என, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொதுச் சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.
அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாகக் குற்றம் சாட்டிய நீதிபதி, தலைவர்கள் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அதேசமயம் பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது எனத் தெரிவித்ததுடன், சிலைகளை பராமரிக்க, தலைவர்கள் பூங்கா உருவாக்கி அங்கு சிலைகளை வைக்கலாம் என்று தமிழக அரசுக்கு ஆலோசனை தெரிவித்தார்.
சமுதாயத்துக்காகத் தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது. அதை அவர்கள் கற்பிக்கவில்லை என்றும் கூறியதுடன், பொதுஇடங்களில், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தலைவர் சிலைகளை அகற்றி, அதை தலைவர்கள் பூங்காவில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிலைகள் பராமரிப்பதற்கான செலவுகளைச் சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தனியார் இடங்களில் சிலை வைப்பது அவர்களின் விருப்பம் எனத் தெரிவித்த நீதிபதி, பொது இடங்கள், சாலைகளில் சிலைகள் வைப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தைப் போக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, பொது மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள் அமைப்பது தொடர்பாக விரிவான விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சிலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு நகல்: