லக்னோ: உ.பி. லக்கிம்பூர் கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு, உ.பி. மாநில அரசு மட்டுமின்றி, அங்கு விவசாய குடும்பத்தினரை சந்திக்க சென்ற பஞ்சாப் மற்றும் சத்திஸ்கர் முதல்வர்களும், போட்டிபோட்டு நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளனர். இதனால், உயிரிழந்த ஒவ்வொரு விவசாயி குடும்பத்திற்கும் தலா ரூ.1 கோடி முதல் ஒன்றரை கோடி வரை நிதி உதவி கிடைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த சனிக்கிழமை விவசாயிகள் போராட்டத்தின்போது, அங்கு சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் மகன் கார் மோதியதில் விவசாயிகள் 4 பேரும், அதனால் ஏற்பட்ட வன்முறையில் 4 பாஜகவினர் மற்றும் ஒரு பத்திரிகை யாளரும் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உ.பி மாநில பாஜக அரசு சார்பில் தலா 45 லட்சம் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, நேற்று இரவு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகெல் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்சித் சிங் சன்னி ஆகியோர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்களது பங்குக்கும் நிதிகளை வாரி வழங்குவதாக அறிவித்தனர்.
சத்தீஸ்கர், பஞ்சாப் மாநிலங்களைச் முதல்வர்களான சரஞ்சித் சிங் சன்னி, பூபேஸ் பாகெல் ஆகியோர் வன்முறையில் உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் 1 உள்ளூர் பத்திரிகையாளருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி, அதாவது இரு வரும் சேர்ந்து தலா ரூ.1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்து உள்ளனர்.
ஏற்கனவே மாநில அரசு 9 பேருக்கும் ரூ.45 லட்சம் நிதி உதவி வழங்கி இருப்பதுடன், காங்கிரஸ் முதல்வர்கள் அளித்துள்ள நிதியும் சேர்ந்து, வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியே 45 லட்சம் நிதி உதவி கிடைத்துள்ளது, அத்துடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு மாநில அரசில் வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.