திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிறது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
நடப்பாண்டு புரட்டாசி வரருடாந்திர பிரம்மோற்சவ விழா கொரோனா தொற்று காரணமாக, பக்தர்களின்றி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதனால் ஏழுமலையான் கோவில் முழுவதும் அழகிய வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டும், திருப்பதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ,தோரணங்கள் அமைக்கப்பட்டு ஜொலி ஜொலிக்கிறது.
கோவிலின் முக்கிய வழிபாட்டு இடங்களான தங்க பலிபீடம், கொடிமரம் பிரத்தியேகமாக மலர் மற்றும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை சேனாதிபதி உற்சவமும், அங்குரார்ப் பணமும் நடைபெற்றது.
இன்று 7-ம் தேதி கொடியேற்றமும், இரவு பெரிய வாகன சேவையும் நடைபெறும். இதில் முக்கிய வாகன சேவைகளான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் 11-ம் தேதியும், 12-ம் தேதி தங்க தேர்த்திருவிழாவும், 14-ம் தேதி தேர்திருவிழாவும், நிறைவு நாளான 15-ம் தேதி காலை சக்கர ஸ்நானமும், அன்று மாலை கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதையடுத்து, இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று மூலவருக்கு பட்டு வஸ்திரம் சாத்துகிறார். அத்துடன் திருப்பதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் இன்று தொடங்கி வைக்கிறார்.
அதேபோல் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அலிபிரியில் இருந்து திருமலை வரை சீரமைக்கப்பட்ட நடை பாதையை திறந்து வைக்கிறார்.