மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய 8 பேரை பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
இன்று காலை ஆர்யன் கான் உள்பட 8 பேரிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டது. அவர்களது செல்போனில் பதிவாகி இருந்த உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை உலகை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்தநிலையில் ஆர்யன் கானை மீட்க பாலிவுட் திரை உலகின் பல்வேறு தரப்பினரும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளை மும்பை போலீசார் கண்காணித்து வருவதாக தெரிகிறது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சிறிது அளவு வைத்திருந்தாலே ஓராண்டு ஜெயில் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு போதைப் பொருட்களை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் வரை கூட தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆர்யன் கான் விசாரணை தகவல்களை பாலிவுட் திரை உலக பிரமுகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர்.