மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பவர்களை அடையாளப்படுத்தி பொதுவெளியில் அவமானப் படுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி கூறியுள்ளார்.

தேசப் பிதா மகாத்மா காந்தி கற்றுத்தந்த அறவழிதான் இன்றுவரை இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காத்து வருகிறது என்றும் கூறினார்.

காந்தியின் 152 வது பிறந்த தினமான இன்று நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவுகள் போடப்பட்ட நிலையில், வருண் காந்தி தனது ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நாதுராம் கோட்ஸே வைப் புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவரின் உயிர் தியாகத்தை கொச்சைப் படுத்தும் விதமாக பதிவிட்டு வருபவர்கள் மீது மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பது குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், “காந்தியை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு கோட்ஸே-வை புகழ்பவர்கள் இந்தியாவையே இழிவு படுத்துகிறார்கள்” என்று மக்களவை உறுப்பினரும் பாஜவைச் சேர்ந்தவருமான வருண் காந்தியின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.