சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என அறிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், மாற்று அடையாள அட்டைகள் விவரத்தை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ந்தேதி தொடங்கி 22ந்தேதி முடிவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்று இன்று (25ந்தேதி) வேட்புமனு வாபஸ் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலும் வெளியாகி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், வாக்களிக்க தகுதியான வாக்காளார்கள் தேர்தல் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்காலாம் என்று தெரிவித்து உள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட 11 அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதார் அட்டை
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை
- புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
- தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு
- ஓட்டுநர் உரிமம்
- நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)
- தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு (Smart Card)
- இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
- மத்திய / மாநில அரசு, மத்திய / மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்கருக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.
- பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.