மதுரை: மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏராளமான திட்டங்கள் அறிவித்து பேசினார். அப்போது, அங்கு கூடியிருந்தமக்களிடம், குறை இருந்தால் சொல்லுங்கள் என எளிமையாக பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கிராம சபை கூட்டத்தில், முதல்வராக மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.மதுரை மாவட்டம், பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
முன்னதாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்று அளித்தனர். பின்னர் பொதுமக்கள் தங்கள் ஊராட்சிக்குத் தேவையான கோரிக்களை முன்வைத்து பேசினர். ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக அமர்ந்து கேட்டுக்கொண்டு சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கூட்டத்தில், தாங்கள் கிராமத்திற்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் குறித்து ஆண்கள் சார்பில் மூன்று பேரும், பெண்கள் சார்பில் மூன்று பேரும் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, தி.மு.க அரசின் நான்கு மாத ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்றும் மக்களிடம் ஆர்வமாக கேட்டறிந்ததுடன், தி.மு.க அரசின் செயல்பாட்டில் குறையிருந்தால் சொல்லுங்கள் என எளிமையாக கூறினார். நீங்கள் குறை கூறினால்தான், அதை நாங்கள் சரி செய்ய முடியும் என முதலமைச்சர் கூறியபோது பொதுமக்கள் அனைவரும் சிறப்பான ஆட்சியாக இருக்கிறது என தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய முதல்வர், ”பாப்பாபட்டியில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் நான் பங்கேற்றதில் மகிழ்ச்சி. கிராமம்தான் இந்தியா என்று கூறியவர் காந்தி என்று மதுரையுடன் மகாத்மா காந்திக்கு உடைய தொடர்பு குறித்து பேசினார். பின்பு, தான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது, 2006ஆம் ஆண்டு பாப்பாபட்டியில் நடந்த தேர்தல் குறித்த நினைவலைகளை பகிர்ந்தார். தொடர்ந்து பேசியவர்,” திமுக தேர்தல் நேரத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாக்குறுதிகளில் சொன்னதும் சொல்லாததையும் நிறைவேற்றியுள்ளோம். இது சாமானியர்களுக்கான ஆட்சி. இது எனது அரசு அல்ல; நமது அரசு என்றார். தொடர்ந்து உங்களுக்கு வர இருக்கும்புதிய திட்டங்கள் குறித்து கூறுகிறேன், இது உங்களை மகிழ்விக்கக் கூடிது என்று கூறி திட்டங்களை அறிவித்தார். அதன்படி,
பாப்பாபட்டியில் , ரூ.23.5 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் ,
பாப்பாபட்டி, மகாதேவன் பட்டி ஆகிய கிராமங்களில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம்,
ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை
மகாதேவன்பட்டியில் 30 லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கத் தொட்டி
கல்லுபட்டி, மகாதேவன்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ.48 லட்சம் மதிப்பில் மயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
6 லட்சம் மதிப்பில் கதிர் அறுக்கும் களம் அமைக்கப்படும்
இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வேன்.
இந்தளவுக்கு ஆர்வமாக கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் வந்திருப்பது மகிழ்ச்சி” என்று பேசி முடித்தார்.
https://twitter.com/i/broadcasts/1eaKbNbOaDrKX