மதுரை: வுடிகளை ஒழிக்கும் விஷயத்தில் ஜெயலலிதாவை போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறமையாக செயல்படுகிறார் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாக முதல்வர் ஸ்டாலினை  ஓபிஎஸ் புகழ்ந்துபேசி வரும் நிலையில், தற்போது  செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்தார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது, அதனை விரைவில் சீரமைக்க வேண்டும் மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏற்கனவே முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ், ஸ்டாலின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டி வருவதுடன், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசும்போது, “என்னுடைய அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் பக்தர்… கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும்.. பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அந்த வசனங்கள் எப்போதும் துணை நின்றுள்ளது… கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றி” என்று கூறியதுடன், திமுக அரசின் பல்வேறு சாதனைகளை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.